Thursday 12 September 2013

தயவு செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது புழுதி வாரித் தூற்றாதீர்கள்…

கடந்த சில நாட்களாக இணையத் தளங்களிலும் முகநூலிலும் ஏனைய பல ஊடகங்களிலும் தமிழ் தேசீயக் கூட்டமைப்பு மீதும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரச சார்பு இணையத்தளங்களிலும் அவர்களுக்குத் துதி பாடும் தமிழ் குழுக்களாலும் முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் இங்கே குறிப்பிடவில்லை
.
மாறாக தமிழ் தேசியத்தையும் தமிழ் மண்ணையும் மனதார நேசிப்பவர்கள் பலரிடமிருந்தும் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கிறேன்.

இவர்களில் சிலர் தமிழீழக் கனவு கொண்டோராகவும் இன்னும் சிலர் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் தமிழர் தாயகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணங் கொண்டவர்களாகவும் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது அதன் தலைவர் சம்பந்தனோ அல்லது ஏனைய உறுப்பினர்களோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணியதுமில்லை. மாறாக தமீழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடத்திலும் விமர்சனங்கள் உள்ளன.
ஆனாலும் நான் இந்த இடத்தில் வெப்பியாரப்படுவது இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படும் காலகட்டம் குறித்தே.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதற் கொண்டே சிங்கள அரசாங்கத்தினதும் அதன் ஆதரவு தமிழ் குழுக்களினாலும் சிங்களப் படையினராலும் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது நாங்கள் இந்தக் கால கட்டத்தில் முன்வைக்கும் இத்தகைய விமர்சனங்கள் எவ்வாறான பிரதிபலிப்பை காட்டலாம் எனச் சிந்திப்போம்.

ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களாலும் விரக்தி கலந்த வாழ்க்கை முறையாலும் தோற்கடிக்கப்பட்ட மனநிலையுடன் வாழும் வடக்கு மக்கள் இத்தகைய விமர்சனங்கள் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதிருப்தியுற்று வாக்கெடுப்பை புறக்கணித்தால் அதன் விளைவு சிங்கள அரசாங்கம் எதிர்பார்ப்பதைப் போல அதிகளவான அரச ஆதரவு பிரதிநிதிகளை மாகாண சபைக்கு அனுப்பி வைப்பதாகத் தான் இருக்க முடியும்.

ஏற்கனவே ஒரு பொதுத் தேர்தல் புறக்கணிப்பீன் மூலம் ஈபிடிபிக்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை வழங்கிய வரலாற்றுத் தவறை செய்த நாம் மீண்டும் ஒருமுறை அத்தகைய தவறைச் செய்யப் போகின்றோமா? 40, 50 வாக்குகளுடன் பாராளுமன்றப் பிரதிநிதிகளைக் கண்டு சாதனை படைத்த மண் யாழ்ப்பாண மண் என்பதை மறந்து விடாதீர்கள்.

இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு மன்னாரிலிருந்து ரிசாத் பதியுதீனின் அடியாட்களும் கிளிநொச்சியிலிருந்து கீதாஞ்சலியின் காடைகளும் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கஜனின் அடிவருடிகளும் மாகாண சபையை அலங்கரிப்பதை ஊக்குவிப்பதாகவே அமையும்.

இதனைத் தவிர்ப்பதற்கு அனைவரும் வாக்களிப்பதே ஒரே வழி என்பதை மனதில் நிறுத்துவோம்.  தாயகத்தில் வாழும் எம் உறவகளையும் வாக்களீக்க ஊக்கப்படுத்துவோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த சில வேட்பாளர்கள் மீது உங்களிற்கு அதிருப்தியிருந்தால் அவர்களைத் தவிர்த்து இதுநாள் வரை தாயக் கனவுடன் பயணித்தவர்களுக்கு வாக்களித்து அவர்களைப் பிரதிநிதிகளாக்க உதவுங்கள்.

இன்றைக்கு சுருங்கி விட்ட உலகத்திலே இணையத்தின் வீச்சு என்பது பலம் மிக்கது. எனவே இந்த இணைய வாயிலான பிரச்சாரங்களும் வடக்கு தேர்தலிலே கணிசமான ஆளுமையை செலுத்தக் கூடியது என்பதை உணர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு முழுப்பலத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.


தேர்தலில் மக்கள் வழங்கும் ஆணை வழிதவறிச் செல்ல நினைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் கடிவாளமாக அமைந்து அவர்கள் யதார்த்தத்தை உணர வழி செய்யும் என்று நம்புவோம்…

No comments:

Post a Comment